தருமபுரி:தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடக்கக் காலத்தில் 38 சதமாக இருந்த தேர்ச்சி விழுக்காடு தற்போது 90 சதத்தைக் கடந்து விட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தேர்வுத்துறை கடுமையான, தேவையற்ற சில நடவடிக்கைகளை ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்து வருகிறது.
தேர்வு மையங்களுக்கு இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்ற பெயரில் வரும் பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். இதனால், மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். பள்ளி நேரங்களில் மாணவர்களை கடுஞ்சொல்களால் பேசினால் விசாரணை, உரிமை மீறல் என நடவடிக்கை எடுக்கும் பள்ளிக் கல்வித்துறை, தேர்வு காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்வு அறைகளில் மாணவர்கள் துண்டுச் சீட்டுகள் வைத்திருப்பதை பறக்கும் படையினர் கண்டுபிடித்தால் அறைக் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், வருங்காலங்களில் தேர்வுப் பணிக்கு வர ஆசிரியர்கள் அச்சப்படுவர்.
எனவே, இத்தகைய நடவடிக்கைகளை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டிக்கிறது. அதேபோல, கடந்த சில நாள்களுக்கு முன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment