100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என்பதற்காக, தமிழகத்தின் பல பள்ளிகளில், சரியாக படிக்காத, தேர்ச்சியடைவார்கள் என்ற நம்பிக்கையில்லாத மாணவர்களை, சிலபல காரணங்களைக் கூறி, பள்ளி நிர்வாகமே, தேர்வெழுத விடாமல் தடுக்கிறது என்ற செய்திகள் அடிக்கடி வருகின்றன.
தங்கள் மாவட்டம், மாநிலத்திலேயே, தேர்ச்சி விகிதத்தில் முதல் மாவட்டமாக வர வேண்டும் என்ற எண்ணத்தில், கல்வித்துறை அதிகாரிகளும் இந்தக் கொடுமையை கண்டுகொள்வதில்லை என்ற புகார்களும் உண்டு.
ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்புமிக்க கல்விமுறையானது எங்கேப் போய்க் கொண்டிருக்கிறது, இதுபோன்ற ஒரு கல்வித்திட்டத்தில் படித்து வெளியே வருவோர், எப்பேர்பட்டவர்களாக இருப்பர் போன்ற அம்சங்களை நினைத்துப் பார்க்கும்போது, சமூக அக்கறையுள்ள பலருக்கும் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
இதுகுறித்து சில கல்வியாளர்கள் சொன்ன கருத்துக்கள் இங்கே சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளன;
கல்வியை முழுவதுமாக ஏற்று நடத்தவேண்டிய அரசே, பல்லாண்டுகள் முன்பு, அதை தனியாரிடம் தாரை வார்த்தது என்பது சமூக வீழ்ச்சியின் ஒரு அடையாளம். ஆனால், தனியாரிடம் விட்டது மட்டுமின்றி, தனியார்கள் செய்யும் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் விட்டது, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தாமல் அலட்சியம் செய்தது போன்றவை, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு மேலும் துணை செய்தன.
வெறுமனே மதிப்பெண்களை வைத்து மட்டுமே ஒரு மாணவரின் திறனையும், அறிவையும் மதிப்பிடுவது, இந்தியா போன்ற நாடுகளில் ஒரு சாபக்கேடாக இருப்பது, நமக்கெல்லாம் பழகிவிட்டது. ஆனால், அதிலும் இப்போது கொடுமைகள் நடப்பதுதான் கவனிக்கத்தக்கது.
மாணவர்களை முதல் மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்பதில் தொடங்கி, 100% தேர்ச்சிபெற வேண்டும் என்ற வேகத்தில், பள்ளிகள் இதுபோன்று, மாணவர்களை தேர்வெழுத விடாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், அவற்றை பள்ளிகள் என்றே கருதுவதற்கான தகுதியை இழக்கின்றன.
இது ஒரு மிக மிக ஆபத்தான போக்கு. நெருக்கடியின் பொருட்டு, அரசுப் பள்ளிகளும் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. சில அரசுப் பள்ளிகள், முக்கியமான அரசு விடுமுறை நாட்களில்கூட, சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன.
எனவே, இது உடனடியாக யோசித்து தீர்க்க வேண்டிய சமூகப் பிரச்சினை. தனியார்கள் யோசிப்பதுபோல், அரசும், கல்வியை, ஒரு வியாபாரக் கருவியாகவும், மாணவர்களின் சிந்தனைத் திறனிலிருந்து பெருமளவு விலகிய ஒரு அம்சமாகவும் கருதலாமா?
No comments:
Post a Comment