காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, துணைவேந்தர் சு. நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்தது: காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழா, ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தர் ரெனைனா ஜப்வாலா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் ஜி. விசுவநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 1,044 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இப்பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பட்டங்களில் முதன்முறையாக 10 சிறப்பு அம்சங்களான எழுத்துகள் நீரில் அழியாத தன்மை, கிழிக்க முடியாத தன்மை, ஆலமரத்துடன் கூடிய பல்கலை. மணி மைதானம் பின்புலம், பல்கலை. சின்னத்துடன் கூடிய பாலிமர் ஷீட்டில் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இதனை 100 ஆண்டுகள் வரை கிழியாமல் பாதுகாக்க முடியும்.
அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் பட்டியலும் 16 சிறப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றார் அவர். அப்போது, பல்கலைக்கழகப் பதிவாளர் பி. பாலசுப்பிரமணியன், நிதி அலுவலர் பாலசுப்பிரமணியம், மக்கள் தொடர்பு அலுவலர் ஒ. முத்தையா உடனிருந்தனர்.
No comments:
Post a Comment