பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும். இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 கட்–ஆப் மதிப்பெண் 132 மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 200–க்கு 200 மதிப்பெண் 5 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.
மேலும் 200–க்கு 199.75 கட்–ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி 199 வரை கட்–ஆப் மதிப்பெண் போட்டி குறைவாக இருக்கும்.
200–க்கு 199–க்கு கீழே 198.75 முதல் 197.75 வரை வழக்கமான கட்–ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்படும்.
இந்த ஆண்டு 197.5 கட்–ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போன 1266 மாணவர்கள் இந்த வருடம் சேர முயற்சி செய்கின்றனர். மருத்துவ கட்–ஆப் மார்க் குறைவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் என்ஜினீயரிங், பல் மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை தேர்வு செய்து ஒரு ஆண்டு படித்து வந்த போதிலும் ஒரு மார்க் 0.5 கட்–ஆப்பில் அரசு மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள்.
அதனால் பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தற்போது பிளஸ்–2 முடித்துள்ள மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 197.50 கட்–ஆப் மார்க் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைந்துள்ளது.
400 பழைய மாணவர்கள் இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொறியியல் படிப்பை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 9710 மாணவர்கள் கணிதத்தில் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 198 மதிப்பெண் 15 ஆயிரம் மாணவர்கள் எடுத்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு உரிய இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்ணை, பிரதான கணிதப் பாடத்தில் மாணவர்கள் எடுத்துள்ள அதிக மார்க் சமன் செய்து விட்டது.
இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ, கட்–ஆப் 200–க்கு 0.25 மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்..
No comments:
Post a Comment